பாரதி சே

இனியொரு விதி செய்வோம்

Posts Tagged ‘மூவர்ணம்’

சுதந்திரம் வேண்டுமென சங்கே முழங்கு…

Posted by பாரதி சே மேல் திசெம்பர் 9, 2008

triumph-of-labour

சுந்தரமாய் ஓர் மந்திரம்

சுகமாய்ச் சுடர் விட்டெரிய

வலிமையாய் ஓர் எந்திரம்

வலி பல கொண்டே படைத்தோம்

வளமையாய் அதை அமைக்க

பொலிவாய்ப் பல திட்டங்கள்

கனவுகள் பல கொண்டே

கனிவாய் விதைத்தோம் களனியிலே.

 

 

வடிவினை வாட்டமாய்க் கொண்டு

வர்ணங்கள் மூன்று கண்டு

வர்ணணைகளுடன் தந்தோம்

வட்டம் நடுவிற் கொண்டு

இதுவே எங்கள் தேசியக் கொடி என்று.

 

 

சீரோடு பறக்க சிறப்புறவே எழுந்த கொடி

மாரோடு அறைந்து தன் மனக்கவலை இறக்குதடி.

மூவர்ணம் கொண்டாலும் நாவரளும் தொனியில்

வர்ண்ணைகளுடன் வாகாய்ச் சொன்ன வர்ணமெல்லாம்

வழிமாறிப் போனதென வருத்தமாய்ச் சொல்லுதடி.

 

 

சினந்து வழிந்த காவியோ,

சிவப்பாய் மும்பையிலும், வறுமையிலும்

பிணைந்து நின்றுவிட்டது.

 

சிறப்பாய் இருந்த மனித

உதிரத்தின் சிவப்போ, உள்ளூர

சாதி வெறியாய் ஊறிவிட்டது.

 

சமயமாய் சிந்திய காவியோ,

அரசியலாய் உருவெடுத்து,

அமைதி குலைத்து, மசூதி இடித்து

ஆர்ப்பாட்டம் செய்கின்றது.

 

 

உவந்து பறந்த வெள்ளை, அச்சு

உழன்ற காகிதமாய், சாதிப்பெயர் காட்டிச்

சான்றிதழாய்ச் சங்கோஜமாய்ச் சிரித்து நிற்கின்றது.

 

சருமத்தில் படர்ந்த வெண்மையோ,

சடுதியில் மதி மயக்கும் சக்தியாம்

வெள்ளித்திரை முதல் வெள்ளை மாளிகை வரை

பல்லிளிக்கும் பழக்கத்தைப் பதமாய்க் கற்றுத் தருகின்றது.

 

 

பரவி விரியும் பச்சையோ,

முதுகெலும்பை முடமாக்கி

மூளையை முன்னுக்கு வைக்கின்றது.

 

விவசாயத்தை விபச்சாரி ஆக்கி

விண்வெளிதனை விமர்சையாய் மணக்கின்றது.

 

விவசாயியின் நிலையோ, இன்று வாழ்வா, சாவா?

விமர்சையான வாழ்விற்கு இன்றே படி mainframe, java.

இதுதான் விவசாய நாட்டில், பசுமைப்புரட்சியின் விளைவா?

 

எஞ்சிய பச்சையும் எழுதுகோல் மையாய்,

எண்பதும், இருபதுமாய், கிடைப்பது பலவும்

கையூட்டாய், அதிகாரத்துடன் பெற்றுக்

கையெழுத்தாய், அரசாங்க கோப்புகளில் ஒழுகுகின்றது.

 

 

நிர்கதியற்று நடுவில் நிற்கும் நீல வர்ண சக்கரமோ,

நிர்மூலமான நதிகளில் கலக்கும் வேதிப்பொருட்களாலும்,

நாதியற்று நீங்கள் நடுவழியில் விடும் குப்பைகளாலும்,

பேதியுற்று, கேட்க நாதியற்று

நிதர்சனமாய், நிதானமாய் இறந்து கொண்டிருக்கின்றது.

 

 

இவ்வளவும் இவ்வாறே நிகழ்ந்து கொண்டிருக்க,

எள்ளளவும் தயக்கமின்றி, ஆர்ப்பாட்டமாய்த் தயாராகிறீர்கள்

அடுத்த கொண்டாட்டத்திற்கு.

இதோ, இந்த வருடமும்

அதே கூட்டம், அதே உரை, முடிவில் இனிப்பு வழங்கல்

 

இறுதியில் கைவிடப்பட்ட தனிக்கம்பத்தில்

தவிப்புடன் நான் மட்டும் தனியே பறந்து கொண்டிருப்பேன்.

 

 

பட்டொளி வீசியல்ல.

 

பாவமாய்த் தனியே பேசி

 

– (ஆகஸ்ட் 2008, ’சுதந்திரம்வேண்டி நின்ற சுந்தரதேவிக்கு.)

Advertisements

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »