பாரதி சே

இனியொரு விதி செய்வோம்

எதிரொலி

    சமூக ஒழுங்கு தனி மனித ஒழுங்கைத் தீர்மானிக்கிறதா? அல்லது தனி மனித ஒழுங்கு சமூக ஒழுங்கைத் தீர்மானிக்கிறதா? இவற்றிற்கிடையேயான தொடர்பு எத்தகையது?


தனிமனித ஒழுங்கு??சமூக ஒழுங்கு??

தனிமனித ஒழுங்கு??சமூக ஒழுங்கு??

இது தோழர் மதிக்கண்ணண் அவர்களின் சிறுகதை ’’கணிணி சொல்லும் கதைகள் (விரிவாக்கப் பகுதி)’’இன் மீதான விமர்சனம்(எதிரொலி).

(அக்கதையைப் பகிர்ந்துகொள்ள மேலுள்ள கதைத் தலைப்பின்மீது சொடுக்கவும்.)

இக்கதைகளின் நோக்கம் பற்றியும்,தாக்கம் பற்றியும் விரையுமுன், எதனை நோக்குவது பின் எதனைத் தாக்குவது என்பது பற்றியோ அல்லது எதனைத் தாக்குவது பின் எதனை நோக்குவது பற்றியோ முதலில் தீர்மானிப்போம்.

கணிணி வழி வருவோமானால், (க-ண) முதலில் வலித்துப் பின் மெலிகிறது. கணிணி மொழி வருவோமானால், (Binary- 0 -1) முதலில் சுழித்துப் பின் ஒன்றாவோம்.

எப்படியாகினும் ஆரம்பிக்க வேண்டுமல்லவா? புதுமைப்பித்தனின் கூற்றுப்படி,


‘’நடையால் வழி வளரும்

நடப்பதனால் நடை தொடரும்

அடி எடுத்து வைப்பதற்கு

ஆதி வழி ஏதும் இல்லை’’

என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. இதோ விரிவாக்கப்பகுதி.

இக்கதையின் ஆரம்பம் என்னவோ, சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதையோ என விளிம்புக்குக் கூட்டி வந்து, பின் சமுதாய சூழலில் அடர்ந்து கிடக்கும் முரண்பாடுகளின் இடர்பாடுகள் கொண்ட ஈடேற முடியாத பள்ளத்தாக்கில் நம்மைப் பதியமாக்குகின்றது.

நம் சமுதாயத்தில் இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி எட்டிய பின்னரும், தீர்க்கப்படவியலாத சில பிரச்சனைகள் உள்ளன. ஏனென்றால், அவை விமர்சிப்புக்கு அப்பாற்பட்டவை. அதன் மீது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பதெல்லாம் பெயரளவில் கூட கொண்டிராதவை. பேசுதல், ஆராய்தல் மற்றும் சிந்திப்பதின் மூலமே தீர்க்கப்படக்கூடியவைகள் எல்லா பிரச்சனைகளும். அவ்வாறானவைகளுள் சில ஆன்மீகம், தலையாகி, சிலையாகிப் பின் கலையாக்கப்பட்ட மனிதர்கள், உடலுறவு அல்லது கலவி பற்றிய எண்ணங்கள். அப்படிப்பட்ட கற்பிதங்களில் ஒன்றை ஒரு சமுதாய உணர்வின் வடுவாக வார்த்துக் காண்பித்து, சக ஊழியர்கள், நண்பரகளிடம் படைப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் என்னைச் சற்றே நிதானிக்க வைத்து, அப்படி மீறிப் பரிமாறும் ஒவ்வொருவரிடமும் ’_______’ அடிக்கோடிட்டு, ’இதன் மீதான தங்களின் பார்வை ஒரு சமுதாயக் கண்ணோட்டமாகவே இருக்க வேண்டும்’ என்பதனைச் சொல்லியே தர வைத்து, தந்த சிலரிடமும் பதில் கிடைக்காத, தொலைபேசியில் அழைத்தாலும் மறுத்து விடுகின்ற, வன்மையான விமர்சனங்களையும் பெற வைத்தது என்பதன் மூலம் இதன் கதாபாத்திரங்கள் சமுதாயத்தில் இருக்கின்றார்கள் என்ற உண்மையை உணர்த்தியது.

அதென்ன? புணர்ச்சியில் இயற்கைக்கு மாறானது, இயற்கையோடு இயைந்தது. வன்புணர்ச்சி அல்லது ஒத்திசைவுப் புணர்ச்சி என்று வேண்டுமானால் பிரிவு கொள்ளலாம். இதில் ஏனாதிராஜன் செய்த செயல், அதாவது மிருகங்களுடன் கொண்ட புணர்ச்சி என்பது புதிது ஒன்றும் அல்லவே! நம் பழங்காலச் சிற்பம் மற்றும் ஓவியக் கலைகள் அனைத்திலும் புணரும் வகைகளும், விதங்களும் புரியுமாறு சொல்லப்பட்டுள்ளனவே! புணரும் உணர்வென்பதே இயற்கையில் எழுவதுதானே, ஒன்றும் பிளாஸ்டிக் அல்லது பாலி எத்திலீன் போல செயற்கையாய் வருவிக்கப்படுவது அல்லது கண்டுபிடிக்கப்பட்டதல்லவே!

ஆனாலும் ஒன்பதாவது வரை படித்த ஏனாதிராஜனை இவ்வளவு அறிவிலியாகவும், சுய கட்டுப்பாடு இல்லாதவனாகவும், சுய ஒழுக்கம், உடலுறவு பற்றிய அறிவியல், அதனால் பரவும் நோய்கள் பற்றிய தெளிவு இல்லாதவனாகவும் சித்தரித்திருப்பது சற்று வருத்தம் தருகிறது. ஏனென்றால், பலசரக்குக் கடைகளில் வேலை பார்க்கும் நண்பர்களுக்குப் பல்வேறு புத்தகங்களைப் படிப்பதற்கு, சற்று மிகையான வாய்ப்புண்டு. அதே போல், மீள்ச்சாமியையும், அவரது மனைவியையும், ஏனாதிராஜன் இருப்பினைக் கண்டு கொள்ளாமல் இன்பம் துய்ப்பவர்களாக, சுய பிரஞ்ஞை இல்லாதவர்களாகக் காட்டியிருப்பதும் ஏற்றுகொள்ளவியலாததாய் உள்ளது. அது சரி, இப்படி ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டே போனால் கதை எஞ்ஞனம் சாத்தியம்? ’தசாவதாரம்’ திரைப்படம் போலத்தான், ஒவ்வொரு கமல் பாத்திரமாக, இது தேவையில்லை, இது தேவையில்லை என்று சொல்லிக்கொண்டே போனால் பின் படமேது? படமே பத்துப் பாத்திரங்களுக்குத் தானே!(பிழையாய்ப் பொருள்படின் எண்ணில் கொள்க, ’10’).

சரி, விவாதத்திற்கு வருவோம். நாம் அனைவரும் அறிந்தது போல், நாடோடியாய் வாழ்ந்த, நடந்த மனிதன், நாளடைவில் ஏற்பட்ட இயற்கை மாறுபாடுகளினாலும், விவசாயத்தின் கண்டுபிடிப்பாலும், சிறு சிறு குழுக்களாக, ஆங்காங்கே வாழ ஆரம்பித்ததுதான் சமுதாயம் என்ற அமைப்பின் அடிக்கல் ஆனது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது என்னவோ உண்மைதான். கோடிக்கு அப்புறமும், இப்புறமும் பற்றிச் சொல்லப்படவேயில்லையே! எனவே, கோடியில் மட்டும்தான் நன்மை என்று கருதியிருந்தால், அதற்கு முன்னோ அல்லது பின்னோ எழுந்த தீமைகளும், பிரச்சினைகளுமே விதிகள்(கட்டுப்பாடுகள்) அமைக்கும் விதியினைத் தீர்மானித்தன. இந்தக் கோடிகளின் மேல், கீழ் (+,-) மதிப்புகள்தாம் பின்னாளில் தத்துவத்தாடிகள் வளரவும் காரணமாயின.

விதிகளை அமைக்கக்கூடிய குழுக்களில், எழுந்த ஒருமித்த கருத்துக்கள், ஒருவழியாய்ச் சீரமைக்கப்பட்டுச் சட்டங்களாயின. அவை அனைவரின் ஏற்கப்பட்ட முடிவாதலால், பின்பற்றுதலும் பின் பற்றுதலோடு நிகழ்த்தப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளும் நாம், அந்தக் குழுக்களில் இருந்த ஒவ்வொருவரிடமும் இருந்த முரண்படும் கருத்துகளையும் கவனிக்க வேண்டும். மாற்றங்களும், முரண்களும்தானே ஒரு தன்மையினை/ அமைப்பினை ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு நகர்த்திச் செல்கின்றன. முன்னது சமுதாயத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கம், பின்னது ஏற்கப்படாதது. ஆனாலும் அங்கம்தான். எனவே தனிமனித ஒழுங்குகளின் கூட்டமைப்பான சமுதாய ஒழுங்கே, தனிமனித ஒழுங்கைத் தீர்மானிக்கின்றது. மீண்டும் இந்தத் தனிமனித ஒழுங்கு, சமுதாய ஒழுங்கைத் தீர்மானிக்கின்றது. இந்தச் சுற்று தொடர்கின்றது, தீர்மானிக்க இயலாதபடி. ஆனால் முதன்முதலில் தனிமனித ஒழுங்குகளே சமுதாய ஒழுங்கைத் தீர்மானித்திருக்கின்றது. பின்னர் இந்தத் தனிமனித மற்றும் சமுதாய ஒழுங்குகள் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்து, முட்டை கோழி, கோழி முட்டை என்ற பிணைவுதனை உண்டாக்கி, சிக்கலான வலையினை உண்டாக்குகின்றது.

ஆனால், தனிமனித ஒழுங்கின் தன்மை, கண்டிப்பாகச் சமுதாய ஒழுங்கில் அளப்பரிய மாறுதலை உண்டாக்கும் என்பது திண்ணம்.

இவையெல்லாம் தாண்டி, இப்படி ஒரு ஒழுங்குப் பிரச்சனைகள் உருவாக மற்றுமோர் காரணம், மனிதனின் பரிணாம வளர்ச்சியுடன் மறைமுகமாய்ப் பயணித்து, இப்பொழுது ஒரு மனிதனின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் கருவிகளுள், கோட்பாடுகளுள் ஒன்றாய் உருவெடுத்து, வேரூன்றி நிற்கும் பணம். சரக்கு பணம் சரக்கு என்ற வாழ்வாதார நிலையினை முற்றிலுமாய் மாற்றி, பணம் சரக்கு பணம் என்ற புதிய பொருளாதார நிலைக்குக் கரையொதுக்கிய மாபெரும் சக்தி. மனிதன், உணவு, உடை, உறைவிடம் மற்றும் இனவிருத்தி என்ற இலக்குகளுக்காகப் பணத்திற்கான தேடலைத் தொடங்கியவன், தேடலுக்கான இலக்குகளை அடைந்தும், இலக்குதனைப் பணம் என மாற்றி இன்னமும் தேடலைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றான். பண்ணை முறையின் அடிமைத்தனத்திலிருந்து மீண்டவன் மீண்டும் பணத்திற்கு அடிமையாகிவிட்டான். பணத்திற்காக தன் அடிப்படைத் தேவைகளையும் தள்ளிப்போட ஆரம்பித்தான். இவ்வாறு தன் உணர்வுகளை, பணத்தேவை, பொருள்குவிப்பு போன்றவற்றிற்காய் காவு கொடுத்துவிட்டதின் விளைவும் இது போன்ற செயல்களுக்காய் வித்தாகின்றது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: