பாரதி சே

இனியொரு விதி செய்வோம்

Archive for the ‘கவிதை’ Category

தற்கொலை செய்யத் துணிவிருப்பதால் வாழ்கின்றேன்!

Posted by பாரதி சே மேல் செப்ரெம்பர் 21, 2010

Child soldier

நான் ஒரு போராளி..ஆம், வாழ்க்கையுடன்..


பாதங்கள் வளர்கின்றன‌,

பாதைகள் நகர்கின்றன‌.

நீளும் நீல வானமும்,

வாழ்வின் விளிம்பும்

எதிரெதிர் திசைகளில், நுரையீரலின்

நிதானமான இயக்கத்துடன்.

Advertisements

Posted in கவிதை | Leave a Comment »

திருமண வாழ்த்து

Posted by பாரதி சே மேல் ஏப்ரல் 4, 2009

2257362944_88f61eb8f1

விடுமுறை பெற்று

விழாமுடித்து, விடைபெற வரவில்லை.

விழி நிறைத்து வாழ்த்து சொல்லி

வழியனுப்ப வரவில்லை.

விலா எலும்பாய் விளங்கி நின்று

விழு முன்னே தோள் கொடுக்கும் தோழர்களாய்

சரித்திரப் பக்கங்களில் உயிர்மெய்

எழுத்துக்களால் உயிர்த்து வரும்

சாதனைதனை வெற்றிச் சிகரம் எடுத்துப்

புறப்படும் நண்பர்களுக்கு

எங்கள் சந்தோஷத்தில்

சரிபாதிக்கு மேலும்,

அனுபவத்தில் அடைந்ததனைத்தும்,

அச்சுப் பிறழாமல் கொடுத்து,

அன்பும், அறமும் ஊற்றாய் ஊடே வைத்து,

பண்பும், பயனும் குறையாமல் விளைய,

இல்வாழ்வில் இன்பங்கள் எல்லாம்

இடையறாது செழிக்க

இதயத்திலிருந்து வாழ்த்துகின்றோம்..

இனிய திருமண வாழ்த்துக்கள்!!

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

கால்சியம் முதல் ஜெலட்டின் வரை…

Posted by பாரதி சே மேல் ஏப்ரல் 4, 2009

2813458169_1d427d3e44

படிமங்களாய்க் கிடந்தோம்

படிநிலையாய் பரிணாமத்தில்

நுண்ணுயிர்களாய் நிகழ்ந்தோம்

நாகரீகங்களில் நடை பயின்றோம்

கலாச்சாரக் கரை கண்டோம்

கரைதனில் பல கடை விரித்தோம்

அணுவைப் பிளந்தோம்

ஆழ்கடல் அளந்தோம்

சரித்திரம் பல கடந்தோம்

தரித்திரம் நீங்கா மிக உழன்றோம்

சாத்திர மூத்திரங்களில் சகலமும் இழந்தோம்

நினைவுகளில் திளைத்தோம்

மகிழ்வுகளில் நனைந்தோம்

விடுபட்ட இடங்களை

சந்ததிகளை இட்டு நிரப்பினோம்

நிரம்ப மறுத்த வரிகளில்

தனிமை நிறைத்தோம்

விழிகள் குறுகின, வழிகளும்.

இட்டு நிரப்ப முடியாத

அந்த இடைவெளிக் கோடுகள்,

குழிகளாய், பள்ளத்தாக்குகளாய் மாறி

விழி கடந்து செல்லும் முன்

விழிகளை விசாலமாக்குங்கள்.

நினைவுகளின் சடலங்களில்

நீந்த வேண்டி வரலாம்,

மறுபிறப்புக்கு ஆயத்தமாகுங்கள்…

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

மறக்கவியலாக் கவிதை

Posted by பாரதி சே மேல் ஜனவரி 2, 2009

மறக்கவியலாக் கவிதை

மறக்கவியலாக் கவிதை

மாலை மழையில்

நிரம்பிய வார்த்தைகள்

மழை நின்றதும்

வழிந்து மறந்தது.

UNFORGETTABLE POEM

The stopped rain runaway

by stealing

my drenched words of

feeling.

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , , | Leave a Comment »

சுதந்திரம் வேண்டுமென சங்கே முழங்கு…

Posted by பாரதி சே மேல் திசெம்பர் 9, 2008

triumph-of-labour

சுந்தரமாய் ஓர் மந்திரம்

சுகமாய்ச் சுடர் விட்டெரிய

வலிமையாய் ஓர் எந்திரம்

வலி பல கொண்டே படைத்தோம்

வளமையாய் அதை அமைக்க

பொலிவாய்ப் பல திட்டங்கள்

கனவுகள் பல கொண்டே

கனிவாய் விதைத்தோம் களனியிலே.

 

 

வடிவினை வாட்டமாய்க் கொண்டு

வர்ணங்கள் மூன்று கண்டு

வர்ணணைகளுடன் தந்தோம்

வட்டம் நடுவிற் கொண்டு

இதுவே எங்கள் தேசியக் கொடி என்று.

 

 

சீரோடு பறக்க சிறப்புறவே எழுந்த கொடி

மாரோடு அறைந்து தன் மனக்கவலை இறக்குதடி.

மூவர்ணம் கொண்டாலும் நாவரளும் தொனியில்

வர்ண்ணைகளுடன் வாகாய்ச் சொன்ன வர்ணமெல்லாம்

வழிமாறிப் போனதென வருத்தமாய்ச் சொல்லுதடி.

 

 

சினந்து வழிந்த காவியோ,

சிவப்பாய் மும்பையிலும், வறுமையிலும்

பிணைந்து நின்றுவிட்டது.

 

சிறப்பாய் இருந்த மனித

உதிரத்தின் சிவப்போ, உள்ளூர

சாதி வெறியாய் ஊறிவிட்டது.

 

சமயமாய் சிந்திய காவியோ,

அரசியலாய் உருவெடுத்து,

அமைதி குலைத்து, மசூதி இடித்து

ஆர்ப்பாட்டம் செய்கின்றது.

 

 

உவந்து பறந்த வெள்ளை, அச்சு

உழன்ற காகிதமாய், சாதிப்பெயர் காட்டிச்

சான்றிதழாய்ச் சங்கோஜமாய்ச் சிரித்து நிற்கின்றது.

 

சருமத்தில் படர்ந்த வெண்மையோ,

சடுதியில் மதி மயக்கும் சக்தியாம்

வெள்ளித்திரை முதல் வெள்ளை மாளிகை வரை

பல்லிளிக்கும் பழக்கத்தைப் பதமாய்க் கற்றுத் தருகின்றது.

 

 

பரவி விரியும் பச்சையோ,

முதுகெலும்பை முடமாக்கி

மூளையை முன்னுக்கு வைக்கின்றது.

 

விவசாயத்தை விபச்சாரி ஆக்கி

விண்வெளிதனை விமர்சையாய் மணக்கின்றது.

 

விவசாயியின் நிலையோ, இன்று வாழ்வா, சாவா?

விமர்சையான வாழ்விற்கு இன்றே படி mainframe, java.

இதுதான் விவசாய நாட்டில், பசுமைப்புரட்சியின் விளைவா?

 

எஞ்சிய பச்சையும் எழுதுகோல் மையாய்,

எண்பதும், இருபதுமாய், கிடைப்பது பலவும்

கையூட்டாய், அதிகாரத்துடன் பெற்றுக்

கையெழுத்தாய், அரசாங்க கோப்புகளில் ஒழுகுகின்றது.

 

 

நிர்கதியற்று நடுவில் நிற்கும் நீல வர்ண சக்கரமோ,

நிர்மூலமான நதிகளில் கலக்கும் வேதிப்பொருட்களாலும்,

நாதியற்று நீங்கள் நடுவழியில் விடும் குப்பைகளாலும்,

பேதியுற்று, கேட்க நாதியற்று

நிதர்சனமாய், நிதானமாய் இறந்து கொண்டிருக்கின்றது.

 

 

இவ்வளவும் இவ்வாறே நிகழ்ந்து கொண்டிருக்க,

எள்ளளவும் தயக்கமின்றி, ஆர்ப்பாட்டமாய்த் தயாராகிறீர்கள்

அடுத்த கொண்டாட்டத்திற்கு.

இதோ, இந்த வருடமும்

அதே கூட்டம், அதே உரை, முடிவில் இனிப்பு வழங்கல்

 

இறுதியில் கைவிடப்பட்ட தனிக்கம்பத்தில்

தவிப்புடன் நான் மட்டும் தனியே பறந்து கொண்டிருப்பேன்.

 

 

பட்டொளி வீசியல்ல.

 

பாவமாய்த் தனியே பேசி

 

– (ஆகஸ்ட் 2008, ’சுதந்திரம்வேண்டி நின்ற சுந்தரதேவிக்கு.)

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

உங்களையே கற்பனை பண்ணிக்கலாம்:-)

Posted by பாரதி சே மேல் திசெம்பர் 8, 2008

a_luckylukekopf

ஈர்ப்புகள் வார்க்கப்படலாம்

வார்ப்புகள் ஈர்க்கப்படுவதில்லை.

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »

காதல் மொழி…

Posted by பாரதி சே மேல் திசெம்பர் 8, 2008

lukyluk2

பூவின் வெளிச்சம்

நிறைந்து படர

பேரருவி நிசப்தத்தில்

விழுந்து கரைய

புல்லின் விருட்சம்

பூமி பிளக்க

ஆல் பனித் துளியில்

அமிழ்ந்து கொண்டிருக்க

நம்ப முடியாமல் எழுந்தேன் கனவினின்று,

இருப்பினும்

விடாப்பிடியாக நம்புகின்றேன், காதலினின்று.

வல்லினம் காதலில் மலிந்து கிடக்கின்றதே!

யார் சொன்னது, காதல் மெல்லினமென்று?

மூன்றில் இரண்டு பங்கு வல்லினம்தான் காதலில்

யோசியுங்கள்

-(மே 2007, முரண் பற்றி முயன்று, வலிந்து முளைக்க வைத்த முதல் முயற்சி.)

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

ப்ரூட்டஸே, புகழ் பெறுக

Posted by பாரதி சே மேல் திசெம்பர் 8, 2008

brutus

தன் முதுகின் அழுக்கறியார்

தானே தருமன் என்றுரைப்பார்

தவறுக்கெல்லாம் விளக்குரைப்பார்

தனக்கென்றால் கருத்துரைப்பார்

தன்நிலை பிறர்க்கென்றால்

தரணி கெட்டதென்பார்

தரங்கெட்ட மனிதர் என்பார்

தயங்காது பழித்திடுவார்

தன்மானம் விற்றேனும்

தன்னிலை நாட்டிடுவார்

தானம் பெற மானம்

தயங்காது விலைகொடுப்பார்.

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

தரை மேல் தாரகைகள்

Posted by பாரதி சே மேல் திசெம்பர் 8, 2008

flight

முதல் பயணம்

வியப்பு தரவில்லை.

படிகள் வழிகளுக்காகக்

காத்துக் கொண்டிருந்தன.

ஆங்கிலம் பெண்குரலில்

அழகாய்ப் பிரசவித்துக்

கொண்டிருந்தது.

கூராய் விரைந்து கிளம்பிய

பாதையின் திசை விண்ணில்

பாலம் அமைத்துச் சென்றது.

விரைந்து சுழன்ற

விசிறிகளின் விசையால்

பூமி கீழே சென்றது.

இதோ, நட்சத்திரங்கள் பூமியில்,

நாங்கள் சற்று மேலே!

இடையிடையே,

காற்றுக்குமிழிகள் வந்து

காதடைத்து நின்றன.

ஒவ்வொரு விழுங்கலிலும்

ஒரு காற்றுக்குமிழி

கரைந்து கொண்டிருந்தது.

உயிரற்ற ஒரு கூடு

உயிர்களுடன் உயரப்

பறந்து கொண்டிருந்தது.

பல மனங்கள் ஏனோ

பல்வேறு திசைகளில்

பரிச்சயித்தினை நிராகரித்துப்

பறந்து கொண்டிருந்தன,

ஆனால் கீழ் நோக்கியே!

முதன்முதலாய் ஒரு பயணம்

கேசம் சேதப்படாமல்….

– (நவம்பர் 2007, விண்ணைத் தொடும் ஆசையில் ஓர் விமானப் பயண இரவில்.)

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , | Leave a Comment »

அன்பின் வலியது உயிர்நிலை

Posted by பாரதி சே மேல் செப்ரெம்பர் 14, 2008

அன்பின் வலியது உயிர்நிலை

அன்பின் வலியது உயிர்நிலை

நான் கண்ணீர் விடும்பொழுது

கண் துடைக்கக் கைக்குட்டை வேண்டாம்,

கண்ணீரில் கரைந்தொழுக

வியர்வை வாசம் கமழும் உன் தோள்கள் போதும்.

என் மகிழ்ச்சியில் பகிர்ந்துகொள்ள

உன் சிரிப்புகள் வேண்டாம்,

உன் அருகாமையின் இருப்புகள் போதும்.

என் தோல்வியைக் கரைகடக்க

உன் ஆறுதல் வார்த்தைகள் வேண்டாம்,

என் கரம் பற்றிக் கேசம் கோதும்

உன் மௌன மொழிகள் போதும்.

இவையெல்லாம் நிகழ

மீண்டும் மறந்துவிடும் குழந்தைப் பருவம் வேண்டாம்,

மறந்தாலும் இறந்துவிடும் முதுமையே விரைவில் வேண்டும்.

(ஜீலை 2007, நினைவுகளின் நிழலோடையில் நிஜம் தேடும் நிதர்சனத்தில்.)

Posted in கவிதை | குறிச்சொல்லிடப்பட்டது: , , , , | Leave a Comment »